Take a fresh look at your lifestyle.

ஜனவரி 27, இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை!

12

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்துள்ளது.

இதனிடையே சசிகலா விடுதலை நாளன்று, பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், சசிகலா விடுதலை செய்யப்படும்போது, அவரை அழைத்துச் செல்ல ஏரளாமான தொண்டர்கள் வரலாம் என்பதால் அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அவரது தொண்டர்கள், அவர்களது வாகனங்களை சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அவரது பாதுகாப்பைக் கருதி மற்ற கைதிகளைப் போல் இரவு 7 மணிக்கு இல்லாமல், இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யலாம்.

அவரை கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.

சசிகலா விடுதலை நாளன்று சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்யவும் சிறைத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.