சினம் பட விமர்சனம்

நடிகர்கள்: அருண் விஜய், பாலக் லால்வானி
ஒளிப்பதிவு: கோபிநாத்
இசை: ஷப்பீர்
தயாரிப்பு: ஆர் விஜயகுமார்
இயக்கம்: ஜிஎன்ஆர் குமரவேலன்

சென்னை புறநகர் காவல் நிலையம் ஒன்றின் நேர்மையான காவல் உதவி ஆய்வாளர் அருண் விஜய். அவருக்கு அழகான அன்பான மனைவி, ஒரு பெண் குழந்தை. மகிழ்ச்சியாகப் போகும் அவர்களின் வாழ்க்கை ஒரு நாள் சின்னாபின்னமாகிறது. அந்த அழகான மனைவி கடுத்துக் குதறி கிழிக்கப்பட்டு ஏரிக்கரை புதரில் வீசப்பட்டுக் கிடக்கிறாள். அருகே இன்னொரு ஆணின் சடலம். விசாரிக்கும் ஆய்வாளர் (அருண் வி்ஜய்க்கு ஆகாதவர்) அதை கள்ளக்காதல் என்று கதை பரப்ப, ஊடகங்களில் பரபர செய்தியாகிறது. கொதிக்கும் அருண் விஜய் அந்த ஆய்வாளரைத் தாக்க, இடை நீக்கம் செய்யப்படுகிறார். பின்னர் உண்மை தெரிந்து, வழக்கை அருண் விஜய்யிடமே ஒப்படைக்கிறார் மேலதிகாரி. இந்த மரணத்துக்குக் காரணமானவர்களை அருண் விஜய் எப்படிக் கண்டு பிடிக்கிறார், தண்டிக்கிறார் என்பதுதான் மீதி.

இதற்கு முன்பு நடித்த அத்தனைப் படங்களை விட, இந்தப் படத்தில்தான் அருண் விஜய்யின் தோற்றம், உடைப் பொருத்தம், உடல் மொழி எல்லாமே மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. நடிப்பில் மில்லி மீட்டர் கூட மிகையில்லாமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். அன்பான கணவன், பாசமான அப்பா, நேர்மையும் சிறுமை கண்டு கொதிக்கும் துடிப்பும் மிக்க அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார்.

மனைவியாக வரும் பாலக் லால்வானி குறையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். அந்தக் குழந்தை, கேஎஸ்ஜி வெங்கடேஷ், ஆர்என்ஆர் மனோகர், மறுமலர்ச்சி பாரதி என நடிகர்கள் மிகையின்றி நடித்திருக்கிறார்கள். அருண் விஜய்யுடனே படம் முழுக்க பயணிக்கும் காளி வெங்கட்டுக்கு பழக்கமான வேடம்தான் என்றாலும் அழுத்தமாகப் பதிகிறார்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு, ஷப்பீரின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்க உதவி இருக்கின்றன.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது தவறு. ஒவ்வொரு தனி மனிதரும் இந்த கொடுமைக்கு எதிராக சினம் கொள்ள வேண்டும் என்பதுதான் படத்தின் மையக் கரு. சில இடங்ககளில் படம் தொய்வடைந்தாலும், சொல்ல வந்ததை தெளிவாக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஜிஎன்ஆர் குமரவேலன். அதற்காகவே பார்க்க வேண்டிய படம் சினம்.

Rating: 3.5/5.0

"Sinam" Movie Review.Arun Vijayஅருண் விஜய்சினம் விமர்சனம்
Comments (0)
Add Comment